வல்வை அ.மி.பாடசாலையில் 07 மேமாதம் 2012 அன்று அம்மன் இந்திரவிழாவிற்கு மறுநாள், நகரசபைத்தலைவர் தலைமை வகிக்க யாழ்பல்கலைக்கழக வரலாற்றுத்துறைத் தலைவர் திரு.ப.புஷ்பரட்ணம் PhD அவர்கள் ஆவணக்காப்பகத்தை நாடா வெட்டித் திறந்து வைத்தார். யாழ்மாவட்ட பா.உறுப்பினர் சேனாதிராஜா, முன்நாள் நகரசபைத்தலைவர் சிவாஜிலிங்கம், மற்றும் பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர். பேராசிரியர் தனது உரையில் “நான் ஒரு வரலாற்றுத்துறை ஆசிரியர் என்றவகையில் எமது வரலாற்று மரபுரிமைச் சின்னங்களையும் பாதுகாக்க வேண்டும் என்ற கனவிற்கு இன்றைய நிகழ்வு ஒரு தொடக்கப்புள்ளியாகும். இந்நாள் ஒரு உயர்வான பொன்நாள் என்றும் பார்க்கிறேன். இவர்கள் வயது முதிர்ந்தவர்களாக இல்லாவிடினும் 20 நூல்களுக்கு மேல் மீள்பதிப் புச்செய்து ஒப்படைத்தது மிகப்பெரிய பணியாகும் என்று கூறினார். திரு.சேனாதிராஜா அவர்கள் “எனது நீண்டகால நண்பன் நகுலசிகாமணி அவர்கள் பாரம்பரியமான வரலாறுகளைப் பாதுகாத்து வருபவர். அத்துடன் பழமைவாய்ந்த வரலாற்று நூல்களை அவரின் பாரியாரின் துணையுடன் மீள்பதிப்பு செய்து வருபவர். 1997ல் “வல்வெட்டித்துறை வரலாற்றுச் சுவடுகள்” என்ற நூலுக்கு அணிந்துரை தருமாறு என்னையும் தலைவர் சிவசிதம்பரம் அவர்களையும் கேட்டு எம்மை கௌரவித்திருந்தார். 2002ல் நான் கனடா சென்றபோது அவர்கள் வீட்டில் இரு பிள்ளைகளுடன் ஒன்றாக உணவு அருந்தினேன்.பின்னர் அவர்களின் மரணப்பிரிவு என்னை மிகவும் தாக்கியது. இன்று அவர்களின் புகைப்படம் காட்சிப்படுத்தியது மிகுந்த கவலையை அளிக்கிறது. அவர்களுக்கு எனது அஞ்சலியைச் செலுத்துகிறேன். அவருடைய அர்ப்பணிப்பும், பெருமை மிக்க உழைப்பும், இவற்றை எவ்வளவு சிரமப்பட்டு இப்பயணத்தில் கொண்டு வந்திருப்பார் என்பது எனக்குத் தெரியும். இவற்றை நாம் ஒன்று சேர்ந்து பாதுகாத்து எதிர்கால சந்ததியினரிடம் ஒப்படைக்க வேண்டும்” என்றார். திரு.சிவாஜிலிங்கம் அவர்கள் தனது உரையில் “நகுலசிகாமணி அவர்கள் நான் சிறு வயதாய் இருக்கும்போதே வல்வை சனசமூகநிலையத்தில் வெள்ளிவிழா கொண்டாடிய சமயம் நிர்வாகியாக செயற்பட்டவர். நகுலசிகாமணி தம்பதியினர் தமது இரு பிள்ளைகளின் மறைவிற்குப் பின்னர் தொடர்ந்து இப்பணியில் ஆராய்ச்சி செய்து சிறிதளவிலேனும் ஆறுதல் அடைகிறார்களென எண்ண முடிகிறது. இன்று நான் இதுவரை பார்க்கமுடியாத, கேள்விப்படாத பல பொக்கிஷங்களை, நூற்றாண்டுகள் கடந்த பெரியார்க ளின் நூல்களை இங்கு எடுத்துவந்துள்ளார். வல்வை வரலாற்று ஆவணக்காப்பகம் அவசியமானது. பாராட்டுக்குரியது. அவர்களுக்கு எமது பாராட்டுக்கள்” என்றார். இறுதியில் நகுலசிகாமணி நன்றி உரை வழங்கினார். முத்துமாரி அம்மன் திருவிழாவிற்கு வந்திருந்த புலம் பெயர்ந்த மக்களும் கலந்து சிறப்பித்தனர். அதனைத் தொடர்ந்து மதிய உணவுடன், விழா இனிது நிறைவுபெற்றது.


