1965ம் ஆண்டு வேம்படி அருகே சாலையோரமாக நடந்துகொண்டிருந்த திரு.வேலும்மயிலும் என்ற வர்த்தகரை இராணுவ வாகனம் அடித்துக் கொன்றது. அதன் சாரதியோ அதில் இருந்த சிப்பாய்களோ அதைப்பற்றி அக்கறைப்படாது வாகனத்தை நிறுத்தாமல் சென்றுவிட்டார்கள். மறு நாள் திரு.வேலும்மயிலும் அவர்களது இறுதிக்கிரியை நடந்த போது மக்கள் பெருந்திரளாக வந்து வணக்கம் செலுத்தினர். கிரியைகள் முடிந்தபின்பு மக்கள் அனைவரும் இராணுவத்தினருக்கு எதிராக அமைதியான முறையில் கோஷங்கள் எழுதப்பட்ட அட்டைகளைத் தாங்கி ஊர்வலமாக சனசமூகசேவா நிலையம் வரை சென்று தமது எதிர்ப்பைத் தெரிவித்தார்கள்.
அதனைத் தொடர்ந்து ஆழிக்குமரன் ஆனந்தன் தலைமையில் காலஞ்சென்ற வேலும்மயிலும் குடும்பத்தினர்க்கு நிவாரணம் வழங்கவேண்டும் என்றும் இதுபோல் மீண்டும் நடக்காது என்று அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் கோரி பத்து இளைஞர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தனர். உண்ணாவிரதம் இருந்தவர்களில் ச.காந்தி தாசன், கோ.ஜெயபாலன், ந.நகுலசிகாமணி, இ.அமரசேனாதிபதி, சந்திரலிங்கம் (மானா அண்ணா) ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள். பின்னர் அரசகுழுவொன்று உண்ணா விரதம் இருந்தவர்களைச் சந்தித்துப்பேசியது. யாழ் அரச அதிபர் D.R.O, வல்வை இராணுவமுகாம் பொறுப்பதிகாரி, வல்வைப் பொலிஸ் அதிபர் ஆகியோர் கலந்துகொண்டனர். வல்வைமக்கள்சார்பில் பருத்தித்துறை பா.உ.அவர்களும் கலந்து கொண்டார். பின்னர்தாம் அரசுடன்பேசி நடவடிக்கை எடுப்பதாகவும் உண்ணா விரதத்தைக்கை விடும்படியும் கேட்டனர். அதற்கு மூன்றுநாட்களின்பின் நிறுத்தப்பட்டது. ஆனந்தன் விளையாட்டு வீரன் மட்டுமல்ல தமது மக்களின் உரிமைப் போராட்டத்திலும் கலந்துகொண்ட போராளி யும் ஆவார்.
குறிப்பு: இதன் புகைப்படம் உண்ணாவிரதம் இருந்தவர்கள் பதாதைகளுடன் சனசமூக நிலையம் முன்பு எடுக்கப்பட்டது. என்னிடம் இருந்த படம் போராட்டச்சூழலில் தவறிவிட் டது. கிடைத்தபின் வெளிக்கொணரப்படும்.


