வல்வை முத்துமாரி அம்மன்

வல்வை. ந.நகுலசிகாமணி.
வல்வை முத்துமாரி அம்மன்

வல்வையில் முத்துமாரி அம்மன் கோயிலே மிகப்பழமை வாய்ந்தது. இது எக்காலத்தில் எவரால் ஸ்தாபிக்கப்பட்டது என்பது தெரியவில்லை. பறங்கியர் காலத்திற்கு முன்பும் அவர்கட்கு பின்பும் நீராவிக்கப்பல் வரும் வரைக்கும் தென் இந்தியாவுக்கும் வடஇலங்கைக்கும் தொடர்பு விசேஷமாக வல்வெட்டித்துறை துறைமுக வழியாகவே இருந்தது. இலங் கைக்கு அதிகம் கிட்டவுள்ள இந்திய பாகம் கோடிக்கரையாகும். கோடிக்கரைக்கும் வல்வைக்கும் ஒழுங்கான தோணிப் போக்குவரவு இருந்தது. தென்இந்தியத் தபாலும் இந்த மார்க்கமாகவே வந்தது.

தபாற் போக்குவரவு காலத்தில் ஒருநாள் கோடிக்கரையிலிருந்து தபால்தோணி புறப்படும்போது ஓர் வயோதிப மாது தோணிக்காரன் முன்தோன்றி தன்னையும் தோணியில் ஏற்றிச்சென்று இலங்கைக் கரையில் விடும்படி கேட்டாராம். தோணிக்காரரில் ஒருவர் எங்கேபோகின்றாய் எனக்கேட்டபோது கிழவி வல்வெட்டித்துறைக்குப் போகவேண் டும் என்றாராம். அங்கு என்னபணிவிடை என்ற கேள்வி க்குப் பதில் கிடைக்கவில்லை எனினும் தோணி கிழவியுடன் வல்வைக்கு வந்து சேர்ந்தது. வந்ததும் கிழவி அவர்கட்கு ஆசி கூறி அவர்களை விட்டு மறைந்து போயினர்.

இப்படி நடந்த இரண்டொரு நாட்களுக்குள் தற்கால முத்துமாரி அம்மன்கோயில் கற்பக்கிரகமிருக் குமிடத்தில் இரவில் சில நேரங்களில் ஓர் வெளிச்சம் காணப்பட்டதாம். அந்த வெளிச்சத்தைப் பல முறை கண்ணுற்ற வல்வைவாசி ஒருவர் அவ்விடத்தில் ஒரு கொட்டில் கட்டி வழிபட ஆரம் பித்தார். சொப் பன வாயிலாகவும் அம்மையார் அப்பக்தனுக் குத்தோன்றியிருக்கலாம். அதுவே வல்வை முத்துமாரி அம்மன்கோயில் வரலாறு எனக் கருதப்படுகிறது.

ஆகவே இக்கோயில் பறங்கியர் காலத்தின்முன் நல்லூர் அரசர் காலத்திலேயே தோன்றியிருக்க வேண்டும். கூளங்கை சிங்காரியன் வந்தகாலம் 1048ம் ஆண்டுவரையில். பறங் கியர் யாழ்ப்பாணம் வந்தகாலம் 1919ம் ஆண்டு. ஆகையால் வல்வை அம்பாளின் வணக்கம் இக்காலத்துக்கிடையில் தொடங்கியிருக்க வேண்டும். அரசாட்சியாரின் கோயில்க ளின் டாப்பில் வல்வெட்டித்துறை முத்து மாரியம்மன் கோயில் 1975ம் ஆண்டு வேலாயுதர் புண்ணியர் என்பவரால் கட்டப்பட்டது எனக்காண ப்படுகிறது. ஆங்கிலேயர் யாழ்ப் பாணத்தை 1795ம் ஆண்டில் கைப்பற்றினார். அதன் முன் கோயில் சாந்துக் கட்டிடமாக இருந்தபோதிலே கோயிலுக்குரிய விக்கிரகங்கள் இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளன.

திரு.மேனியார் வெங்கடாசலம், திரு.தாமர்செல்லையா, திரு.பெ.கதிர்காமத்தம்பி, திரு.சு.க.தம்பிப் பிள்ளை, திரு.நா.கனகசுந்தரமும் திரு.ஆ.வேலுப்பிள்ளையும், திரு.வி.செ. செல்லவிநாயகமும் இவ ர்களின்பின் திரு,இ.முத்துவேலுவும் திரு.வி.ச.சோமசுந்தரம் ஆகியோர் மணியமாக இருந்திருக்கி றார்கள்.1990ம் ஆண்டில் ஒரு தடவை புனராவர்த்தன கும்பாபிஷேகம் நடந்திருக்கின்றது. திரு.ஆ. நாகமுத்து மணியக்காரராக இருந்தகாலத்தில்தான் எழுந்தருளி முத்துமாரி அம்மன் இந்தியாவிலிரு ந்து தருவிக்கப்பட்டதாகக் கூறு கிறார்கள். 1933ம் ஆண்டின்பின் திரு.வ.வ.இராமசாமிப்பிள்ளை (வ. இ.அப்பா) நியமனம் பெற்றவுடன் பழைய கட்டிடங்கள் யாவும் இடிக்கப்பட்டு கற்கட்டிடங்களாக மாற்றப்பட்டன.

கோயிற் பகுதிகள் – திருப்பணி செய்தவர்கள்.

1. கர்ப்பக்கிரகமும் அர்த்தமண்டபமும் – சி.செல்லத்துரையும் பெண் வள்ளியம்மாளும்.
2. பிள்ளையார் – திரு.பொ.தங்கவேலாயுதமும் பெண் இராசரத்தினமும்.
3. முருகையா – சி.ஆனந்தமயிலும் பெண் விசாலாட்சியும்.
4. காத்திலிங்கம் – வ.இ.வைத்திலிங்கமும் பெண் சௌந்தரிஅம்மாளும்.
5. வைரவசாமி – க.முருகமூர்த்தி.
6. தம்பமண்டபத்தடி வில்லுப்பந்தல் – மதனசுந்தரம் சிறிதரன்.
7. மணிக்கோபுரம் – கனடாவாழ் வல்வை மக்கள்.
8. தெற்குவாசல் முகப்பு – பா.கமலசுந்தரி
9. வசந்தமண்டபம் மாபிள்வேலை – தி.விஜயரெத்தினம்.
10. சண்டேஸ்வரி – ஆ.செல்லத்துரை பெண் தங்கரெத்தினமும்.
11. தீர்த்தக்கிணறு – தா.சின்னத்தம்பியும் பெண் தங்கக்கண்ணுவும்.
12. மின்வெளிச்ச அறை – சி.வேலும்மயிலும் ஐயர்.
13. வசந்தமண்டபம் – வே.வ.சிவப்பிரகாசம்
14. யாகசாலை – வி.செல்வவிநாயகமும் பெண் விசாலாட்சிபிள்ளையும்.
15.திருச்சபை – வ.இராமசாமிப்பிள்ளையும் பெண் இராசம்மாளும்.
16. மகாமண்டபம் தரிசனமண்டபம் – வல்வைப் பொதுமக்கள்.
17. நந்திபலிபீடம் – மா.இராசா

இவ்வேலைகள் யாவும் முடிக்கப்பட்டு 1935ம் ஆண்டு யுவவருடம் ஆனிமாதம் 24ம் திகதி வேதாரணியம் சிவஶ்ரீ.ச.சோமசுந்தரக்குருக்கள் அவர்களால் சம்ரோக்‌ஷண மகாகும் பாபிஷேகம் நடைபெற்றது. 1943ம் ஆண்டு மணிக்கோபுரமும் மணியும் வல்வை மக்களால் செய்யப்பட்டன. தேர்முட்டி சேதமடைந்திருந்தமையால் அதைப் புதிதாக திரு.சி. விஷ்ணுசுந்தரம் கட்டுவித்தார்கள். பூங்காவனமண்டபம் பொது மக்களால் கட்டப்பட்டது. 1957ம் ஆண்டில் 12ம் உற்சவக்காரர் கேள்விக்கிணங்க இராஜகோபுரம் இடிக்கப்பட்டு கீழ்பகுதி வைரக்கருங்கற்களினால் கட்டப்பட்டு இராஜகோபுர மேல்பகுதியும் நல்ல அலங்கார முறையில் கட்டிமுடிக்கப்பட்டது. முத்துமாரிக்குச் சித்திரத்தேர் செய்யவேண்டு மென்று முடிவுசெய்ததில் ஊரவர்களே பணம்சேர்த்து 1979ம் ஆண்டு அம்மனுக்கும் 1981ம் ஆண்டு பிள்ளையார் முருகனுக்கும் செய்யப் பட்டுவிட்டன.

இத்திருப்பணிகள் சிறப்பாக நடந்தபின்பு 26 -01 -1967ம் ஆண்டு பாரபவ வருடம் தைமாதம் 13ம் திகதியில் புனராவர்த்தன சம்புரோட்சண கும்பாபிஷேகம் இனிது நடைபெற்றது. இக்கோயிலில் சைவக் குருக்கள்மாரே பிரதம குருக்களாக இருந்து வருகிறார்கள். 16 -01 -1963 தொடக்கம் சிவஶ்ரீ.சோ.தண்டபாணிதேசிகர் அவர்கள் (J.P அகில இலங்கை) பிரதம குருக்களாக இருந்து சிறப்பாகவும் நிறைந்த பக்தியுடனும் தொண்டாற்றி வருகின்றார். நாட்டில் யுத்தம் நடைபெற்றபோதிலும் அம்பாளுக்குத் தொடர்ச்சியாக எவ்வளவோ இடைஞ்சலுக்கு மத்தியிலும் பூசை நடாத்திய பெருமைக்குரியவர்.

அம்பாளுக்கு வெள்ளியினாலான சிங்கவாகனத்தை வ.இ.நடனசிகாமணி அவர்களால் செய்து கொடுக்கப்பட்டது. அதில் அம்பாள் வீதி உலாவருவது கண்கொள்ளாக் காட்சி
யாக இருக்கும். நாட்டில் நிலவிய சூழ்நிலையின் நிமித்தம் 22 வருட காலம் கும்பாபிஷேகம் நடைபெறாமல் போய்விட்ட நிலையில் 07 -06 -2001ல் பாலஸ்தாபனம் செய்யப்பட்டது. வேலைகள் யாவும் துரிதகெதியில் நடைபெற்று சிறப்பான முறையில் 07 -06 -2002 அன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்போது ஆரம்பகாலத்தில் மணியமாக மா.நடனசி காமணி, அவர்களும் பின்னர் குகப்பிரசாதன் அவர்களும், பா.உதயகுமார் அவர்களும் இருந்தார்கள்.

அம்மன் ஊஞ்சல் பாடல்

மாவிலங்கைச் சூடும் மாமதுரை வல்வை
தேவி முத்துமாரி நீ ஆடும் பொன்னூஞ்சல்
வல்வை முத்துமாரி நீ ஆடும் பொன்னூஞ்சல்
(மாவிலங்கை)

அநுபல்லவி

பூவில் உயர் பங்கமே ஆடு பொன்னூஞ்சல்
பொன் மணிச்சரம் அசைய ஆடு பொன்னூஞ்சல்
(மாவிலங்கை)

கோடிக்கரை நீங்கி வல்வை வந்தவளே ஆடு
கயிலை மாதரசி என்றவளே ஆடு
தேடியெமை ஆளவந்த தேவி நீ ஆடு
திகட்டாத செந்தேனே பொன்னூஞ்சல் ஆடு
(மாவிலங்கை)

கிண்கிணிச் சலங்கைகள் குலுங்கிடவே ஆடு
கங்கணங்கள் கலகலெனக் கவினூஞ்சல் ஆடு
தன்னிலவு உத்தநகை பொங்கிடவே ஆடு
தொழும் அடியார் பிணி தீர்க்க மணியூஞ்சல் ஆடு
(மாவிலங்கை)
வல்வை கமலா.பெரியதம்பி அவர்களின் “நம்தாயார் தந்த தனம்” நூலிலிருந்து.

சித்திரையா பறுவத்திலே அம்மன் தீர்த்தமாடி கோயிலை
வந்தடையும்போது பக்தர்களால் பாடப்படும்
உடுக்குப் பாடல்

1. வாசலிது வாசலிது எங்கள் மாரியம்மாளுடைய வாசலிது.
2. மேடையிது மேடையிது எங்கள் மெல்லிழையாளுடைய மேடையிது.
3. நாங்கள் பூசைபண்ணி அனுதினமும் புகுழ்ந்தேற்றும் மாரி வாசலிது.
4. ஆயிரம் மாரி கண்ணுடையாள் எங்கள் அலங்காரி வரும் வாசலிது.
5. பதினாயிரம் மாரி கண்ணுடையாள் எங்கள் பராசக்தி வரும் வாசலிது.
6. வாசலிது வாசலிது எங்கள் மாரியம்மாளுடைய வாசலிது.
7. கங்கையிலே மாரி தலைமுழுகி எங்கள் கிளிமொழியாள் வரும் வாசலிது.
8. வைகையிலே மாரி தலைமுழுகி எங்கள் வனமயிலாள் வரும் வாசலிது.
9. பொய்கையிலே மாரி தலைமுழுகி எங்கள் பூங்கொடியாள் வரும் வாசலிது.
10. சித்திரையா பறுவத்திலே அம்மன் தீர்த்தமாடி வரும் வாசலிது.
11. வீதிசுத்தி பவனிவரும் எங்கள் மேகவண்ணன் தங்கை வாசலிது.
12. வாசலிது வாசலிது எங்கள் மாரியம்மாளுடைய வாசலிது.
13. உலகளந்தோன் தங்கையாம் அம்மன் உத்தமியாள் வரும் வாசலிது.
14. கோடியாக் கரையை விட்டு இங்கே குதித்து வந்தாள் வரும் வாசலிது.
15. அரனுடனே வாதாடும் எங்கள் ஆங்கார மாரி வரும் வாசலிது.
16. சிவனுடனே வாதாடும் எங்கள் தேவி நல்லாளுடைய வாசலிது
17. வாசலிது வாசலிது எங்கள் மாரியம்மாளுடைய வாசலிது.

இப்பாடல் பாடும்போது நாதஸ்வரம், மேளம், சங்கு யாவும் நிறுத்தப்பட்டு அம்மன் வீதிசுற்றி இருப்பிடம் வந்தடையும்போது நிசப்தமாகப் பாடி வருவார்கள்.

தொகுப்பு: ஆதிகோயிலடி திரு.அப்பாத்துரை சித்திரவேலாயுதம்.

வல்வைப் பெரியார் வ.வ.இராமசாமிப்பிள்ளை அவர்களின் 10வது நினைவு மலரிலிருந்து.

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
மேலும் வாசிக்க
Scroll to Top
Scroll to Top