துரைரத்தினம் அரசியலில் எவ்வளவு கண்ணியமானவராகவும் தமிழ்தேசிய உணர்வுடனும் வாழ்ந்தாரோ, அந்த அளவுக்கு யாழ்ப்பாணத்தின் பொருளாதாரத்தின் மீதும் அக்கறையுடன் செயற்பட்டார். ஒரு தடவை இஸ்ரேலின் பொருளாதார அமைப்பை ஆய்வுசெய்வதற்காக சில பாராளுமன்ற உறுப்பினர்குழு ஒன்று சுற்றுலாவை மேற்கொண்டிருந்தபொழுது அந்தக்குழுவில் க.துரைரத்தினம் அவர்களும் ஒருவராகச் சென்றிருந்தார். அவர் அங்குநின்ற நாட்களில் யாழ்ப் பாணத்தின் புவியியல் நிலமைக ளைக் கொண்டிருந்த இஸ்ரேலில் நன்கு செழித்து வளர்ந்திருந்த வளர்ந்திருந்த திராட்சைப்பழச் செடிகளைப் பார்த்ததும் அவற்றை எமது பிரதேசத்தில் அறிமுகப்படுத்து வதில் ஆர்வத்துடன் இருந்ததால் அங்குள்ள விவசாய பொருளாதார அமைச்சுடன் தொடர்புகொண்டு, திராட்சைப் பயிர்ச்செய்கை தொடர்பான நுட்பங்களை அறிந்துகொண்டார். அவர் இஸ்ரேலிலிருந்து திரும்பும்போது விமானநிலையத்தில் பலர் அவரைக் கேலிசெய்தனர்.
அவர்களுடைய கேலிச்சொற்களையும் பொருட்படுத்தாது, இஸ்ரேலிலிருந்து கொண்டுவரப்பட்ட திராட்சைத்துண்டங்களை முதலில் தொண்டைமானாற்றில் தனதுறவினர் ஒருவரின் தோட்டத்தில் நடுகைசெய்து அவைபற்றிய பயிர்ச்செய்கைமுறைகள், கத்தரித்தல், பசளையிடுதல், பூச்சிகொல் லிகளைப் பயன்படுத்தும் சந்தர்ப்பங்கள்பற்றிய தகவல்களைச் சொல்லிக்கொடுத்து அதன்பயன் கிடைக்கும்வரை கூடவேதொடர்ந்தும் கண்காணித்துவந்தார். அவரது முயற்சியினாலேயே இலங்கைக்குத் திராட்சைப்பழம் கிடைத்தது. அங்கிருந்தே குடாநாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் திராட்சை வெட்டுத்துண்டங்களை இலவசமாக விநியோகித்து விவசாயிகள் மட்டத்தில் திராட்சை செய்கையை பரவலாக்கினார். அவரது அந்த முயற்சியின் சாதனைபற்றி ஆங்கில சிங்கள ஊடகங்கள் உட்பட அனைத்துவூடகங்களும் முக்கியப்படுத்தியிருந்தன. 1970ம் ஆண்டில் விவசா யத் திணைக்களத்தின் மாதாந்த வெளியீடான “கமத்தொழில் விளக்கம்” சஞ்சிகை க.துரைரத்தினம் திராட்சைப்பழத்தை இலங்கையில் அறிமுகப்படுத்தியமை தொடர்பாக மிகச்சிறப்பானமுறையில் ஆசிரியத் தலையங்கத்திலெழுதி அவருக்கு வாழ்த்தையும் தெரிவித்திருந்தது.
தமிழ்மக்களின் விடிவிற்காக தனது செல்லமகனை களப்பலியாக்கிய ஒரேஒரு தலைவராக அமரர் க.துரைரத்தினம்தான் மக்கள்மனதில் நிறைந்து நிற்கின்றார். பாராளுமன்ற ஆசனங்களை தனது மக்களுக்காக இழந்துவிட்ட நிலையிலும் யாழ்ப்பாணத் தின் பொருளாதாரம், அரசியல் விழிப்புணர்வு என்பவற்றை மக்களிடையே ஏற்படுத்தும்வகையில் பேசி, செய்தும் காட்டிய க.துரைரத்தினம் அவர்கள் யாருமே எதிர்பார்க்காத நிலையிலே அவரதுசுகயீனம் காரணமாக 1995ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 23ம் திகதி இயற்கைச்சாவைத் தழுவிக்கொண்டார். அவர் இறுதி நாட்கள்வரை எந்தவிதமான ஏற்றத்தாழ்வுகளுமின்றி எல்லோருடனும் அன்பாகவும், பண்பாகவும், நகைச்சுவையாகவும் பழகும் துரைரத்தினம் பதவிப் போட்டிக்காக தமிழ் மக்களையும் நாட்டையும் காட்டிக்கொடுக்கும் முயற்சிகளில் காலத்திற்குக்காலம் காட்சிகளைமாற்றி வெவ்வேறு தலை மைத்துவத்தின் கீழ் செயற்பட்டு மக்களை காலத்திற்குக்காலம் ஏமாற்றிவரும் ஒரு மூன்றாம்தர அரசியல்வாதியாக என்றுமே அவர் செயற்பட்ட தில்லை. அதனாலேயே அவரது பெயர் இன்றும் தமிழர்களின் அரசியல், சமூக, பொருளாதார வரலாற்றில் நிலைத்து நிற்கின்றது. அமரர்.க. துரைரத்தினத்தின் வெற்றிடம் இன்றும், வல்வெட்டித்துறையின் அரசியலில் காணப்படுகின்றது.
துணைநூல் – வல்வெட்டித்துறை வரலாற்றுச் சுவடுகள் – ந.நகுலசிகாமணி.


