பருத்தித்துறை உடுப்பிட்டித் தொகுதிகளும் பாராளுமன்ற உறுப்பினர்களும் வல்வெட்டித்துறை நகரசபையும்

என் மனத்திரைகளில் சில…….. !

இலங்கை 1948ல் சுதந்திரமடைந்தபின்பு முதலாவது பாராளுமன்றத் தேர்தலில் உடுப்பிட்டி, பருத்தித்துறை, வல்வெட்டித்துறை அடங்கலாக பருத்தித்துறைத் தொகுதி ஏற்படத்தப்பட்டது. அதன் பாராளுமன்ற உறுப்பினர்களாக :

1.  திரு.ஜி.ஜி.பொன்னம்பலம். (தமிழ் காங்கிரஸ் கட்சி)

2. திரு.ரி. ராமலிங்கம்.

3. தோழர் பொன்.கந்தையா (கம்யூனிஸ்ட் கட்சி, 1965ம் ஆண்டு)

4. திரு.க.துரைரெத்தினம். ( தமிழரசுக் கட்சி. 1960 -1983)

1956ம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் பொன்.கந்தையாவுடன் திரு.மு.சிவசிதம்பரம், திரு.க.துரைரெத்தினம் மூவரும் போட்டியிட்டு, பொன்.கந்தையா அவர்கள் முதலாவதும், இன்றுவரையும் வடபகுதியில் வெற்றிபெற்ற ஒரே ஒரு கம்யூனிஸ்ற் பாராளுமன்ற உறுப்பினராவார். பருத்தித்துறை மக்கள் தொகையில் கூடியதால், 1960ம் ஆண்டு தேர்தல் நிர்ணயம் பிரிக்கும்போது பருத்தித்துறை, உடுப்பிட்டித்தொகுதி என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. பருத்தித்துறைத் தொகுதி; தொண்டைமானாறு, வல்வெட்டித்துறை, பொலிகண்டி, அல்வாய், பருத்தித்துறை, தும்பளை, கற்கோவளம், மணற்காடு, குடத்தனை, அம்பன், நாகர்கோயில், செம்பியன்பற்று, மருதடிக்குளம், உடுத்துறை, ஆளியவளை, வெற்றிலைக்கேணி, முள்ளியான் ஆகிய கிராமங்கள் அடங்கியதும், மிகவும் நீளமானதும், மீனவசமுதாயம் பெரும்பாலும் கொண்ட தொகுதியாகும். அவர்கள் பிரதிநிதி ஒருவர் பாராளுமன்றம் செல்லவேண்டும் என்ற வேண்டுகோளின்படி அத்தொகுதி அமைக்கப்பட்டது. பின்பு 1960ம் ஆண்டு மார்ச்சில் நடை பெற்ற தேர்தலிலிருந்து பருத்தித்துறைத் தொகுதியில் திரு.க.துரைரெத்தினம் அவர்களும் (தமிழரசுக்கட்சி) திரு.மு.சிவசிதம்பரம் அவர்களும்  காங்கிரசுக் கட்சியில் தெரிவு செய்யப்பட்டனர்.  

திரு.மு.சிவசிதம்பரம் அவர்களின் குருல்வன்மை காரணமாக அவரை உடுப்பிட்டிச் சிங்கம் என அழைப்பர். அவர் உடுப்பிட்டிப் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தாலும், வல்வெட்டித்துறையின் இன்பதுன்பங்களில் எல்லாம் பங்கெடுத்தவர். 1966 திரு.விஷ்ணுசுந்தரம் அவர்களினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட பிரசவவிடுதி திறப்புவிழாவிலும், 1965ல் சிதம்பராக்கல்லூரியின் இருமாடிக்கட்டிடத் திறப்புவிழாவிலும் கலந்து சிறப்பித்தார். 1968ம் ஆண்டு வல்வை சனசமூகசேவா நிலையத்தில் பொலிசாருக்கு எதிராக நடந்த கூட்டத்தில் தலைவர் திரு.ச.ஞனமூர்த்தி தலைமை தாங்க எமது பாராளுமன்ற உறுப்பினர் திரு.க.துரைரெத்தினம் வல்வை நகரசபைத் தலைவர் மு.இரத்தினவடிவேல் ஆகியோரும் அன்று நிர்வாகச் சபையில் இருந்த திரு.கனக.மனோகரன், நான் உட்பட பலரும் கலந்து கொண்டனர். பொலிசாருக்கு எதிரான கூட்டமாகையால் பொலிசாரின் அனுமதிக்கு விண்ணப்பிக்க முற்படவில்லை. (தனது மகன் கைது செய்யப்பட்டு தாக்கப்படுவதை கேளிவியுற்று நீதி கேட்கப் பொலிஸ்நிலையம் சென்ற தாயும் தாக்கப்பட்ட சம்பவத்திற்காக) கூட்டம் ஆரம்பித்தபின்பு பொலிசாரும் இராணுவத்தினரும் ஆயுதபாணிகளாக வந்து மக்களைத் தாக்கினார்கள். மக்களுக்கு துப்பாக்கியே தெரியாத காலம்.  பெரியவர்களும் இளைஞர்களும் பெண்கள் உட்பட யாவரும் கடைகளிலிருந்த வெற்றுப்போத்தில்களாலும் கற்களாலும் திருப்பித்தாக்கினார்கள். இச்சம்பவத்தில் பாராளுமன்ற உறுப்பினர் உட்பட நூற்றுக்கு மேற்பட்டவர்கள் நிலைய மண்டபத்தினுள் அகப்பட்டிருந்தனர். வீதியால் வந்துகொண்டிருந்த R.V.G பீடீ வர்த்தகர் திரு.வ.இ.சிவஞனசுந்தரம் அவ்விடத்திலேயே பலியானார். ஆத்திரம் அடைந்த இளைஞர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில்  பல பொலிசாரும் காயமடைந்தனர். திரு.சிவசிதம்பரம் அவர்களுக்கு செய்தி அனுப்பப்பட்டு அவரும் உடன் வந்து மக்களை விடுவித்து மறுநாள் பதட்டமான நிலையில் சிம்மக்குரலில் சிவசிதம்பர்ம் அவர்கள் “Put all your gun down” என கர்ஜித்து பொலிசாரை கட்டுப்படுத்தினார். (மேலதிக விபரங்களுக்கு “வல்வெட்டித்துறை வரலாற்றுச் சுவடுகள்”.)

1976ம் ஆண்டு வல்வெட்டித்துறை தொண்டைமானாறு மக்களின் விருப்பத்திற்குமாறாக உடுப்பிட்டி, கரவெட்டி, நெல்லியடி பகுதிகளை அடக்கிய உடுப்பிட்டித் தொகுதி யுடன் அரசியல் காரணங்களுக்காக வல்வெட்டித்துறை தொண்டைமானாறு பகுதிகள் சேர்க்கப்பட்டன. 1977ம் ஆண்டுத் தேர்தலில் பருத்தித்துறைத் தொகுதியில்  திரு.நடராஜா பருத்தித்துறை நகரசபைத் தலைவராக 25வருடங்கள் கடமையாற்றியவரும் சட்டத்தரணியும் பலகாலம் காங்கிரஸ் கட்சியில் நின்றவரும் அப்போது சுதந்தி ரக்கட்சி சார்பிலும், திரு.வீருபாகு அவர்களும் (தொழில் வர்த்தகர்), திரு.க.துரைரெத்தினம் அவர்கள் “தமிழர் விடுதலைக் கூட்டணி” சார்பிலும் போட்டியிட்டனர். 1965ம் ஆண்டிலிருந்து பருத்தித்துறை தொகுதியில் தமிழரசுக்கட்சியின் வாலிப முன்னணியின் சார்பாக வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பல இளைஞர்கள் அணிசேர்ந்து பருத்தித் துறைத் தொகுதி முழுவதும் பிரச்சாரம் செய்தோம். பருத்தித்துறைத் தாளையடியில் வல்வை வர்த்தகர்கள் திரு.சி.விஷ்ணுசுந்தரம், திரு.துரைராசா அவர்களின் வாடியில் உணவு அருந்தியதையும் அவர்களின் Land rovery அங்கு பல பகுதிகளுக்கும் பயணம் செய்ததையும், உடுத்துறையில் தமிழரசு ஆதரவாளர் திரு.சின்னப்பு அவர்களின் வீட்டில் (உடன் மீனில் காலைச் சொதி என்றழைக்கப்படும்) காலை உணவு அருந்தியதையும் நினைத்துப் பார்க்கிறேன்.

1977ம் ஆண்டு தேர்தலின்போது நான் வேலை செய்த கப்பல் கொழும்புத் துறைமுகம் வந்தபோது கப்பலால் இறங்கி அந்தத் தேர்தலில் பருத்தித்துறை நகரசபைக்கு உட்பட்ட பகுதியிலுள்ள ஒவ்வொரு வீடாக வேட்பாளர் துரைரெத்தினம் அவர்களுடன் சென்று பிரச்சாரம் செய்யும் வாய்ப்புக் கிடைத்தது. அதன்பின்பு வழமைபோல யாழ்ப்பாணம் கச்சேரியின் Old Park  முன்றலில் தேர்தல் முடிவை அறிந்து திரும்பினோம்.

     திரு.இராசலிங்கம் உடுப்பிட்டித்தொகுதி. 1977 – 1983

தமிழர் விடுதலைக் கூட்டணியின் வெற்றிவிழாவை வல்வை ரேவடியில் மைதானத்தில் கொண்டாடத் தீர்மானித்தபோது வவுனியாவில் எதிர்க்கட்சித் தலைவர் திரு.அமிர்த லிங்கம் அவர்களின் தெரிவிற்காக கட்சிக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. நானும் மேடைப் பேச்சாளர் நண்பர்  கனக.மனோகரனும் புகையிரத வண்டிமூலம் வவுனியா சென்று அனைவரையும் நேரில் சந்தித்து கூட்டத்திற்கான அழைப்பிதளைக் கொடுத்துவிட்டுத் திரும்பியிருந்தோம். பல ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் வெற்றி விழா நடைபெற்று விசேட விருந்தினராக வந்தவர்கள் எல்லோருக்கும் திரு.அருமைச்செல்வம் (பக்கர் அண்ணா) அவர்கள் வீட்டில் விருந்தும் நடைபெற்றன.

திரு.க.சிவாஜிலிங்கம்  2001 – 2010 வரை, தமிழ்த்தேசிய அமைப்பு. இரண்டு தடவை.

யாழ்மாவட்ட ரீதியில் விகிதாசார முறையில் இரு தடவை பாராளுமன்ற உறுப்பினராக இருந்து பின்னர் வல்வை நகரசபைத் தலைவராக இருந்து, அதன்பின் வடமாகாணசபை உறுப்பினராகவும் கடமையாற்றியவர்.

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
மேலும் வாசிக்க
Scroll to Top
Scroll to Top