வல்வை திரு. ந.நகுலசிகாமணி அவர்களை பல ஆண்டுகளாக நன்கு அறிவேன். ஈழத்தமிழர் வரலாறு சிதைக்கப்பட்டுவரும் இக்காலத்தில் சிதைக்கப்பட்டவற்றை சீராக்கிப் பேணவேண்டும் என்னும் பெருநோக்குடன் உழைத்துவரும் அரியவர் சிலரில் இவரும் ஒருவர்.
இவரது ஆவணக்கண்காட்சிகள் சிலவற்றைக் கனடாவில் பார்த்தநாளிலிருந்து இவர்மீது ஒரு பற்று என் னைப்பற்றிக்கொண்டது. இடையிடையே நடந்தசந்திப்புகளில் அவர் தனது ஆவண முயற்சிகள் பற்றி விளக்கிச்சொல்லியும் இருக்கின்றார். அவற்றிலிருந்து அவரது கனவும் நினைவும் வரலாற்று ஆவணங்களன்றி வேறொன்றில்லை என்பதும் தெரியவந்தது.
ஆவணக் காட்சி:- 1969ல் உடுவிலில் நடந்த தமிழரசுக்கட்சி மாநாட்டில் குரும்பசிட்டி இரா.கனக ரத்தினம் ஆவணக்கண்காட்சி ஒன்றை நடத்தினார். அதனைப்பார்த்த இளைஞர் நகுலசிகா மணிக்கு வல்வையின் வரலாற்றையும் ஆவணப்படுத்தவேண்டும் என்றஎண்ணம் வண்ணச் சிறகடித்தது. அவரின் தேடல்களின்விளைவாக வல்வெட்டித்துறைக் கப்பலின் அமெரிக்கப் பயணம் என்ற நூல் தயாரிக்கப்பெற்றது. இது வல்வெட்டித்துறை மக்களின் கடல்கலாச்சாரத்தை உலகறியச்செய்த புகழ்பெற்ற சுந்தரமேத்திரியாரின் அன்னபூரணி அம்மாள் என்றபாய்க்கப்ப லின் அமெரிக்கப்பயணம் பற்றியது. 1974ல் நடைபெற்ற உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டில் இந்நூல் வெளியிடப்பெற்றது.
பின்னணி:- இவர் 26.12.1947ல் வல்வெட்டித்துறையில் பிறந்தவர். தந்தையார் நடனசிகாமணி பட்டின சபைத்தலைவராக இருந்து மக்கட்பணியாற்றியவர். தாயார் பத்தாவுக்கு ஏற்ற பதிவிரதை யாகிய பார்வதிப்பிள்ளை. நகுலசிகாமணி மூன்று சகோதரர்களும் மூன்று சகோதரிகளும் வாய்க்கப்பெற்றவர். அவர்களில் மூத்தசகோதரர் நீதவானாக இருந்தவர் என்பதும் குறிப்பிடத் தக்கது.
கல்வியை சிதம்பராக்கல்லூரியில் முடித்துக்கொண்டு நகுலசிகாமணி வர்த்தகக்கப்பலில் வேலை செய்யத்தொடங்கினார். சிறுவயதுமுதல் இவரிடத்தில் இருந்துவந்த வாசிப்புப்பழக்கம் வல் வெட்டித்துறை சனசமூகநிலைய நூல்நிலையத்துடன் இணையவைத்தது. தொடர்ச்சியான வாசிப்புப்பழக்கம் இவருக்குப் பரந்தஅறிவை அளித்ததுடன் வல்வெட்டித்துறையின் வரலாற்று நூல் களையும் தேடவேண்டும் என்னும் ஆர்வத்தைத் தூண்டியது.
நாட்டின் இனக்கலவரம் எல்லோரையும் போலவே நகுலசிகாமணியையும் பாதித்தது. இவர் 1992ல் கனடாவில் கால்பதித்தார். வரலாற்றுச்சுவடிகளை தேடும்பணி கனடாவிலும் தொடர்ந்தன. இவரது மனைவி உமாவும் கணவன் தேடிப்பெற்றவற்றை ஆவணப்படுத்துவதில் வல்லமை காட்டிவருகி றார்.
ஆவணக்காப்பகம்:- கனடாவில் திரு.நகுலசிகாமணி வந்திறங்கியது 1992ல் 1993 லிருந்தே இவரது இல்லம் படிப்படியாக ஒரு ஆவணக்காப்பகமாக மாற்றம் பெற்றது. கனடியத் தமிழர்களும் வெளிநாட்டிலிருந்து வரும் நண்பர்கள் அவரது இல்லத்தை நாடி வரலாயினர். தொடக்கத்தில் வல்வெட்டித்துறையினர்தான் அதிகம் வந்துபோயினர். எனின் காலப்போக்கில் தமிழர் வரலாற்றில் ஆர்வமுள்ள அனைவருமே வருகை தரலாயினர். இவர்களுக்கெல்லாம் கவர்ச்சியாக இருந்தது நகுலசிகாமணியின் முதல் வெளியீடான “வல்வெட்டித்துறை வரலாற்றுச் சுவடுகள்” என்ற புத்தகம்.
வல்வெட்டித்துறை மக்களின் வாழ்க்கை இயல்பாகவே கடலோடுகலந்த வாழ்க்கை. ஈழத்த மிழர்கள் இவர்களை ‘கடலோடிகள்’ என்றே அழைப்பர். அன்னபூரணி அம்மாள் வல்வெட்டித்துறை மக்களின் கடற்கலாச்சாரத்தின் ஒரு வெற்றிச் சின்னமாகவே கருதப்படுகின்றது.
இந்தக் கருத்து 2013ல் அன்னபூரணி அம்மாளின் அமெரிக்கப் பயணத்தின் பவளவிழாக் கொண்டாட்டத்திலும் எதிரொலித்தது. பவளவிழா (1938 -2013) வல்வெட்டித்துறையில் வல்வை ஆவணக்காப்பக நிறுவுனர் திரு.ந.நகுலசிகாமணி அவர்களின் தலைமையில் 27.04.2013ல் வெகுசிறப்பாகக நடைபெற்றது.
வல்வை ஆவணக்காப்பகம்:- இது நகுலசிகாமணியின் கனவுக்குழந்தை. இவரது ஆர்வத்தாலும் மனைவி உமாவின் முயற்சியாலும் கனடாவில் படிப்படியாக உருவாகிய குழந்தைதான் வல்வை வரலாற்று ஆவணக்காப்பகம். இதன் பத்தாவது ஆண்டுவிழா 23-05-2013 அன்று ஸ்காபரோ ‘பீட்டர் & போல்’ மண்டபத்தில் கொண்டாடப்பெற்றது.
விழாவின் முக்கியமான நிகழ்வு ஈழத்து வரலாற்று நூல்களும் தமிழர்பண்பாடு தொடர்பாக திரு.நகுலசிகாமணி சேர்த்து வைத்திருந்த ஆவணங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டமை. இதனை கண்டுகளித்த நூற்றுக்கணக்கான மக்களில் நானும் ஒருவன். இவர் கனடா கந்தசாமிகோயிலில் நடத்திய ஆவணக்காட்சி ஒன்றையும் பார்த்திருக்கிறேன்.
கனடாவில் மட்டுமன்றித் தாயகத்திலும் ஆவணக்காட்சிகள் வைக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் 2004ல் தாயகத்தில் நிலவிய இடைக்கால அமைதிக்காலத்தில் தனது பிறந்த பதிக்கு மனைவி பிள்ளைகளுடன் சென்று அங்கும் தான் அரிதும் முயன்றும் தேடியவரலாற்று தகவல்களை காட்சிக்கு வைத்து ஊர்மக்களின் பாராட்டுதல்களைப் பெற்றார். ஒரு தனியூரினது வரலாற்று ஆவணங் கள் காட்சிக்கு வைக்கப்பட்டது அதுவே முதல்தடவை என்று கற்றோர் போற்றும் வகையில் நகுலசிகாமணி சாதனை படைத்தார்.
கனடாவில் 20 வருடங்களுக்கு மேலாக இயங்கிவந்த “வல்வை வரலாற்று ஆவணக்காப்பகம்” வல்வெட்டித்துறையில் 7-05-2012 திங்கட்கிழமை அ.மி.த.க.பாடசாலையில் ஒழுங்கு செய்யப்பட்டு ஒழுங்கு செய்யப்பட்டு விழாவில் “ஆவணக்காப்பகம்” வல்வையில் ஆரம்பிக்கப்பட்டது. நகரசபைத்தலைவர் ந.அனந்தராஜ் தலைமை வகித்தார்.
இவ்விழாவில் யாழ் பல்கலைக்கழக வரலாற்றுத்துறைத் தலைவர் பேராசிரியர் பரமு.புஷ்பரட்ணம் திறந்து வைத்தார். யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராஜா, முன்நாள் பா.உறுப்பினரும் நகரசபை முன்நாள் தலைவருமான க.சிவாஜிலிங்கம், வல்வை நகரசபைத் தலைவர் போன்றவர்கள் கலந்துகொண்டு நகுலசிகாமணியின் அரும்பெரும் தொண்டினைப் பாராட் டிப்பேசினர்.
குடும்பம்:- திரு.ந.நகுலசிகாமணியின் வல்வைவரலாற்றைப் பேணும்முயற்சிக்கு உறுதுணை யாக இருப்பவர் அவரது ஆருயிர் மனைவி திருமதி.உமா அவர்கள். ஆவணங்களைத் தொகுப்பதில் முக்கியபங்கு வகிக்கின்றார். அதுமட்டுமன்றி அவற்றைப்படித்து தகவல்களை மனதில் பதித்தும் வைத்திருக்கிறார். வல்வை வரலாற்று ஆவணக்காப்பகம் பற்றிக் கட்டுரைகளும் பத்திரிகைக ளில் எழுதியிருக்கிறார்.
ஓர் ஆணுக்குப்பின்னால் ஒரு பெண் எப்பொழுதும் இருப்பாள் என்று எப்பொழுதும் இருப்பாள் என்று பொதுவாகச் சொல்வார்கள். இந்தக்கூற்று நகுலசிகாமணிக்குப் பொருந்தாது. ஏனென்றால் நகுலசிகாமணியினின்றும் அவரது மனைவியை என்னால் பிரித்துப்பார்க்க முடியவில்லை. வல்வை ஆவணக்காப்பகம் நினைவு கருக்கொண்டது கணவனுடைய சிந்தனையில்தான் அதனை வளர்த்தெடுத்ததில் கணவனுக்கும் மனைவிக்கும் சமபங்கு உண்டு. வல்வை ஆவணக்காப்பகத்திற்கு ஒரு வரலாறு உண்டு. அந்த வரலாறுபற்றி இருவருக்கும் சோதனை வைத்தால் அதிக புள்ளி எடுக்க வல்லவர் உமாதான்.
இவர்கள் தங்கள் பிள்ளைகள் இருவரையும் 2005ல் விபத்தில் பறிகொடுத்தவர்கள். மூத்தவர் சந்திரசேகருக்கு ( சந்துரு ) வயது 21, இளையவர் சௌமியனுக்கு ( சௌமி ) வயது 19. வாழவேண்டிய வயதில் இவர்களுக்கு நேர்ந்த அகாலமரணம் வல்வெட்டித்துறையை மட்டுமன்றி கனடியத் தமிழ் உலகத்தையே ஓவென்று கதறவைத்தது. இவ்வித தாங்கொணாத துயரத்தை அவர்கள் இன்றும் சுமந்துகொண்டே தங்கள் ஆவணக்காப்பக அலுவல்களையும் செய்து வருகிறார்கள் என்பதை நினைக்கும் பொழுது நிலையற்ற இந்த உலகவாழ்வில் நிலையாக நிற்க வல்ல ஆவணப்பணியால் தமக்குற்ற துயரத்தை ஆற்றியிருக்கக்கூடும் என்ற எண்ணத்தோன்றுகிறது.
தக்கார் தகவிலார் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்படும்.
என்றார் வள்ளுவர் பெருமான். இவர்களின் எச்சம் வல்வை வரலாற்று ஆவணக்காப்பகம். பிறந்தபதியின் வரலாற்றைத் தேடி எடுத்தும் பரப்புரைகள் செய்தும் காட்சிகள் வைத்தும் ஊர்ப்பெருமை களை உலகறியச் செய்தவர்கள் இவர்கள். அதனால் திருவாளர் ந.நகுலசிகாமணி அவர்களுக்கும் திருமதி.உமா.நகுலசிகாமணிக்கும் “ஆவண மாமணி” என்னும் பட்டத்தை வழங்கிப் பாராட்டுகி றேன்.
வாழ்க ஆவணமாமணி திரு.நகுலசிகாமணி.
வளர்க ஆவணமாமணி திருமதி.உமா நகுலசிகாமணி.
ஒரு வேண்டுகோள் இதுவரை சேர்த்த தகவல்களைக் கொண்டு வல்வெட்டித்துறையின் வரலாறு மற்றும் பண்பாடு யாவற்றையும் வெளிப்படுத்தும் பெருநூல் ஒன்றை “வல்வெட்டித்துறை மான்மி யம் என்ற பெயரில் இவர்கள் ஆக்குதல் வேண்டும்.


