உலகத்தமிழாராய்ச்சி மாநாடு நடைபெறுவதற்கு ஈழத்து (ஈழத்தில் அவதரித்த தமிழ் முனிவர்) தனிநாயகம் அவர்கள் ஆற்றிய பணிகளே, முதலாவது மாநாடு கோலாலம்பூரில் நடைபெற்றது. அப்போதைய மலேசியப்பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மானால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இரண்டாவது மாநாடு தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் முதலமைச்சர் சி.என்.அண்ணாத் துரையின் தலைமையில் கலைஞர் கருணாநிதியின் வழிநடத்தலின்கீழ் பேரெழுச்சி விழாவாக நடைபெற்றது. மூன்றாவது மாநாடுபாரிஸ்நகரில் அரசியல்கலப்பின்றி அறிஞர்களின் ஆய்வர ங்கமாக நடைபெற்றது. யாழ்ப்பாணத்தில் 1974ல் நடைபெற்ற நான்காவது தமிழாராய்ச்சி மாநாடு அரசின் எதிர்ப்புக்கு மத்தியில் மக்கள் விழாவாக பேராசிரியர் வித்தியானந்தன் தலைமை யில் நடைபெற்றது. அந்த மாநாடு நடைபெற்ற நாட்களில் வவுனியாவிலிருந்து வடபகுதி முழுவதுமே விழாக்கோலமாகத் திகழ்ந்தது. மாநாடு இறுதி நாளன்று ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கூட்டம் மாநாட்டிற்கு வந்த அறிஞர்களை வழியனுப்பத் திரண்டனர். சென்னையைச் சேர்ந்த பேராசிரியர் நைனர்.முகம்மது தமிழின் இனிமையைப் பற்றிப்பேச மெய்மறந்து சுவைத்தி ருந்த மக்கள்மீது வெறிகொண்ட பொலிசார் மிருகத்தனமாகத் தாக்கினர். அப்போது மின்சாரக்கம்பிகள் அறுந்து விழுந்ததின் காரணமாகவும் பொதுமக்கள் நெரிசலின் காரணமாகவும் மக்க ளில் பதினொருபேர் பலியானார்கள். ஈழத்தமிழர்களின் அரசியல் வரலாற்றில் இது ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
1980ன் டிசம்பரில் வர்த்தகக்கப்பலில் வேலைசெய்துவிட்டு விடுமுறைக்குத் திரும்பியவேளையில் பத்திரிகைகளில் ஜனவரியில் ஐந்தாவது உலகத்தமிழாராய்ச்சிமாநாடு தமிழகஅரசால் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்கள் தலைமையில் நடத்தப்பதாக இருநந்தது. மேலும் நான்சார்ந்த தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் பலரும் எதிர்க்கட்சித்தலைவர் அமிர்தலிங்கம் குடும்பமும், எமது பா.ம.உறுப்பினர் க.துரைரத்தினம் அவர்களும் சிறப்பு விருந்தினராக செல்வதையும் அறிந்தேன்.
நானும் ஒரு பார்வையாளராக செல்ல விரும்பி, அவர்களுடன் செல்ல ஒழுங்கு செய்து ஆயத்தமானேன். நாட்கள் நெருங்க யாழ்ப்பாணம் புகையிரதநிலையம் சென்று மன்னார் ஊடாக அங்கி ருந்து கப்பல்மூலமாக செல்வதற்கு பயணச்சீட்டுப் பெற்றேன். ஜனவரி மூன்றாம்திகதிகாலை மன்னார்துறைக்குச்சென்ற எங்கள்எல்லோரையும் மன்னார் பா.உ.திரு.சூசைதாசன்வழியனுப்பி வைத்தார்.எல்லோரும் தமிழ்நாடு பெற்ற கணிதமேதை ராமானுஜம் அவர்களின் பெயரைத்தாங்கிய கப்பலில் ஏறினோம். எங்களுடன் வந்தவர்கள் பா.உ சிவசிதம்பரம், க.பொ.இரத்தினம், வி.என்.நவரத்தினம், வீ.ஆனந்தசங்கரி, கோவை.மகேசன், ஈழவேந்தன், யாழ்ப்பாணம் மேயர் விஸ்வநாதன் குடும்பம், யாழ் பல்கலைக்கழக பேராசிரயர்கள், மாணவர்கள் என ஐம்பது பேரளவில் வந்தார்கள்.
இராமேஸ்வரத்தில் இறங்கியவுடன் எல்லோரையும் மாணவர் பேரவைத்தலைவர் திரு.ஜனார்த்தனம் மற்றும் அரச ஊழியர்கள் யாவரும், சென்றவர்கள் யாவருக்கும் மாலையணிவித்து வர வேற்று புகைவண்டியில் மதுரைக்கு அனுப்பி வைத்தனர். மதுரையில் எங்களை விடுதியில் தங்கவைத்தனர். மாநாடு 5ம் திகதியிலிருந்து 9ம் திகதி முடியும் வரை போக்குவரத்து, உணவு, மற்றும் சகல வசதிகளையும் அரசசெலவில் ஒழுங்கு பண்ணியிருந்தார்கள். மாநாடு நிறைவடைந்தபின்பு உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டினருடன் எங்களையும் சேர்த்து பண்பாட் டுச் சுற்றுலாவிற்கு ( 10-01-1981லிருந்து 14-01-1981 வரை ) தனி தொடர்வண்டி மூலம் ஒழுங்கு செய்திருந்தார்கள்.
தொடர்வண்டி மதுரையிலிருந்து ராமேஸ்வரம் கோயில்கள் சென்று மறுநாள் திருநெல்வேலி, கன்னியாகுமரி கோயில்கள், காந்திமண்டபம், விவேகானந்தர் நினைவுப்பாறை, பின்னர் திருச்சிராப் பள்ளி, திருவரங்கம், தஞ்சைப் பெரிய கோயில்கள், சரஸ்வதிமஹால் நூல்நிலையம், மறுநாள் செங்கல்பட்டு ரயில்நிலையம் வந்து பேருந்து மூலம் காஞ்சிபுரம் வந்து கோயில்கள் தரிசித்து கைத்தறி நெசவாளர் வடிவமைப்புக் கூடத்தையும் பார்வையிட்டு அவர்களின் வரவேற்பிலும் கலந்துகொண்டோம். அதன்பின் பேருந்து மூலம் மாமல்லபுரம் சென்று அங்குள்ள வரலாற்றுச்சிற்பங்களையும் பார்வையிட்டு, தங்கக்கடற்கரை ( வி.ஜி.பி ) வந்தோம். அங்கு பொங்கல் திருவிழா நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு இரவு உணவு, கலைநிகழ்ச்சிகள் பார்வையிட்டு.சென்னைக்கு புறப்பட்டோம். சென்னையில் திருவள்ளுவர் கோட்டத்திலுள்ள மண்டபத்தில் எம்.ஜி.ஆர் தலைமையில் எல்லோரையும் வழியனுப்பும் விழாவும் நடைபெற்று அன்பளிப்புப் பொருட்களுடன் மாநாட்டு மலர் என்பன வும் தந்து மகிழ்ந்தனர்.

