கப்பல் கட்டும் தொழில்

வல்வை. ந.நகுலசிகாமணி.
இலங்கையின் வடக்கேயுள்ள கரையோரப்பட்டினங்களான பருத்தித்துறை, வல்வெட்டித்துறை, காங்கேசன்துறை, ஊர்காவற்றுறை, மாதகல் முதலான பட்டினவாசிகள் பன் னெடுங்காலமாக கட லோடிகளாகவும் கப்பல் கட்டுபவர்களாகவும் இருந்துள்ளார்கள். இற்றைக்குப் பல ஆண்டுகளுக்கு முன்பு வல்வை வாசிகள் பல கப்பல்கள், தோணிகள், படகுகள் அமைத்தும் ஆழ்கடல் ஓடியும் வியா பாரிகளாக பலரும் இருந்தார்கள். இக்காரணங்களால் இந்நாட்டரசர்களும் இந்திய அரசர்களும் அதன்பின் போர்த்துக்கேயரும் ஒல்லாந்தர்களும் பின்பு ஆங்கிலேயரும் எம்மவர்களை கெளர வித்தது வந்ததுடன் பல இந்திய பிரித்தானிய மாலுமிகளிடம் மாலுமிசாஸ்திரம், வானசாஸ்திரம், நாவாய் சாஸ்திரம் முதலிய கலைகளைக் கற்றார்கள். இவர்கள் பர்மா, இந்தியா கரைப்பட்டினங் களான முத்துப்பேட்டை, அதிராம்பேட்டை, நாகப்பட்டினம், கடலூர், புதுச்சேரி, காரைக்கால், கொல்லம், மங்களுர்முதலான இடங்களுடன் தொடர்புவைத்து வியாபாரம் செய்துள்ளார்கள். மேலும் சங்க இலக்கியங்களிலிருந்தும் ஐம்பெரும் காப்பியங்களிலிருந்தும் ஈழத்துணவு காவிரிப் பூம் பட்டணத்தில் இறக்குமதி செய்யப்பட்டது பற்றி அறியக்கிடக்கின்றது. இவர்களின் தொடர் பெல்லாம் பண்டமாற்று முறையிலேயே நடந்திருக்கின்றன. இலங்கையிலிருந்து கிறவல் கற்கள், பனைமரங்களுடன் பனம்பொருட்கள், வாசனைத்திரவியங்கள் முதலானவற்றை எடுத்துச் சென்று அங்கிருந்து மத்தாப்பு, மான்புள்ளிச் சேலைகள், வேட்டிகள், சால்வைகள், முண்டுகள் முதலான புடவைகளையும் சட்டி, பானை, குடம், தூதை, கூசா, சாடி முதலான மட்பாண்டங்களையும் ஓடு வகைகளையும் கொண்டுவந்து அக்காலங்களுக்குத் தேவையான வியாபாரங்களையும் செய்து வந்தனர். இந்தவகைவாணிபம் எல்லாளன் காலத்திலும் சோழப்படையெடுப்பிற்குப் பின்னும் நடைபெற்றுள்ளது.

இப்பொழுது வங்காள தேசம் என்றழைக்கப்படும் நாட்டுக்கு அண்மையிலுள்ள அரக்கனிலிருந்து செட்டிகாமத்தார் கடல்வாணிபத்தை இந்திய தெற்குக் கரையோரப் பகுதி களுடன் செய்து வந்திருக்கிறார்கள். அவர்களில் பலர் கரை காணாத நடுக்கடலில் தங்கள் கப்பல் எந்த இடத்தில் இருக்கிறது என்பதை அறியும் திறமை உடையவர்களாக இருந் தார்கள். இப்படி அறியக்கூடிய திறமை உள்ளவர்களை மாலின் என அழைப்பார்கள். இந்த மாலின் அறிவை கப்பல் ஓட்டிகளும் அறிந்திருந்தார்கள். இவர்கள் செட்டிகாமத்தார் களிடமிருந்து மாலின் அறிவைப் பெற்றதாகக் கூறுகிறார்கள்.

1860ம் ஆண்டளவில் கெச்சுக்கப்பல் கடல் கடந்த வாணிபத்தைத் தொடங்கியதும் அரக்கன், இறங்கூன் வியாபாரத்தில் நல்ல இலாபம் கிடைத்து வருகின்றது என்பதை அறிந்து வல்வை முதலாளிகளும் ஈடுபட்டார்கள். கெச்சுக் கப்பலுக்கு நா.வேலுப்பிள்ளை என்பவர் பெரியவரால் தண்டயலாக நியமிக்கப்பட்டார். அவர் பல வருடங்கள் கப்பலில் தண்டயலாக இருந்தவகையில் அவருடைய இயற்பெயர் வழங்குவது குறைந்து கெச்சுத் தண்டயல் என்ற பெயர் அவருக்கு வழங்குவதாயிற்று.

வல்வையில் அதிகம் பெரியதாயும் அதிகம் சிறயதாயும் இல்லாமல் நடுத்தரமான கப்பல்களைக்கட்டி முடித்து வியாபாரத்தில் ஈடுபட்டார்கள். அந்தக் காலத்திலிருந்து உலகின் எந்த ஒரு நாட்டிலாவது கட்டி முடிக்கப்பட்ட ஒரு கப்பலை முழு நாடுகளிலும் அங்கீகரிக்கப்பட்ட லோயிட்ஸ் என்ற உலக ஸ்தாபனத்தில்தான் கட்டாயம் பதிவுசெய்ய வேண்டும். வல்வெட்டித்துறைக் கப்பல்கள் யாவும் அந்தக் காலத்தில் அப்படிப் பதிவு செய்யப்பட்டவையே. இதனால் போலும் வல்வெட்டித்துறையே ஒரு விசேட துறைமுக மாகவும் கப்பல் கட்டும் தளமாகவும் கடலோடிகள் வசிப்பிடமாகவும் வர்ணித்து “வே ஒவ் பெங்கோல் பைலட்” என்ற சரித்திரப் பிரசித்தி பெற்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நூலின் பிரதிகளைக் கொழும்பு சிப்பிங் அலுவுலகத்திலும் சுங்க இலாகாத் தலைமைப் பீடத்திலும் இன்று காணலாம்.

இந்தக் குறிப்புகளிலிருந்து இந்த வழி வந்த வம்சத்து மக்களே அதிகமாகவும், நாகரீகத்திலும், மேம்பாட்டிலும் தனித்திறமையில் வல்லவர்களாகவும் விளங்குவதுடன் கடலை யும் கரையையும் ஆண்டு கொண்டு வந்தார்கள் என்ற பாங்கில் குறிப்பிடப்பட்டிருந்ததைப் பார்க்கலாம். கப்பல் வாணிபத்தில் முதன்மையானவர்களாகத் திகழ்ந்தவர்கள் குமாரசாமி.முருகுப்பிள்ளையவர்களும் கந்தக்குட்டியார் மக்களாகிய வேலுப்பிள்ளை, கதிரிப்பிள்ளை அவர்களுமாவர்.

1910க்குள் இவ்விதமாக முதலாளிமார்களாக வந்தவர்கள் பலர். அவர்களுள் அருளம்பலம் சகோதரர்களும், வாரித்தம்பி குமாரசாமி மேஸ்திரியாரும் பிள்ளைகளும் கண பதிப்பிள்ளையும் தம்பையாவும் ஆவார்கள். அதற்கடுத்து திருமதி.சரவணமுத்து சின்னத்தங்கம், திருமதி.செல்லையா தெய்வானைப்பிள்ளை, கோ.வ.வடிவேல், கோ.வ.கந்த சாமி, தொண்டமனாறு சி.வீரகத்திப்பிள்ளை முதலியோராவார். முதலாவது உலகமகா யுத்தத்துடன் அநேகர் இந்த வியாபாரத்தில் ஈடுபட்டார்கள். யாழ்குடா நாட்டிலுள்ள பல நாட்டுக் கோட்டைநகரத்தார்கள். தெலுங்குநாட்டு முதலாளிமார்களும், இராமநாதபுரம் ராசா, நல்லூர் கந்தசாமி கோயில் முதலாளிகளும் ஈடுபட்டார்கள். முதலாம் உலக மகாயுத்தம் முடிவுற்றபின்பு வல்வை முதலாளி களும் வாணிபத்தை பெருக்கினார்கள்.

முதலாம் உலக யுத்தத்திற்குமுன் கணிசமான 300 தொன்னுக்குட்பட்ட மரக்கலங்கள் 100 வரை ஓடியன. பின்னர் இரண்டாம் உலகமஹா யுத்தத்தம் ஆரம்பிக்கச் சிலகாலங் களுக்கு முன் 300 தொன் நிறைக்கு மேற்பட்ட கப்பல்களும் அதற்குக் குறைந்தவைகளுமாக மொத்தம் 150 கப்பல்களில் எம்மவர்கள் பல நாடுகளுக்கும் சென்று வந்துள்ளார் கள். இவர்கள் இந்தியாவிலுள்ள அதிராம்பட்டினம், நாகப்பட்டினம், மதராஸ், காக்கிநடா, கல்கத்தா, சிட்டகொங், இரங்கூன், பினாங், இலங்கையிலுள்ள காலி, தொட்டத்துவ, வேருவலை, ஆகிய ஊரைச் சேர்ந்தவர்களுடைய கப்பல்களையும் செலுத்தியுள்ளனர்.

1925ம் ஆண்டு தொடக்கம் 1960ம் ஆண்டுவரை சிறியகப்பல்களுக்கும், பெரியகப்பல்களுக்கும் அதிபதியாக இருந்தவர் வ.இ அப்பா என்று வல்வைமக்களால் அன்பாக அழைக்கப்படும் இராமசாமிப் பிள்ளை அவர்கள். இவர் சிலோன் மாஸ்டர் என்ற நற்சான்றிதழும் மெற்றியாஸ் இரண்டாவது காப்டனின் நற்சான்றிதழும் பெற்றுக் கடலோடி யாக விழங்கியவர். சிவகாமசுந்தரி, சண்முகசுந்தரி, ஆதிலட்சுமி, திருநிறைநாயகி, ஶ்ரீ மகாலட்சுமி, நரசிம்மசாமி என்ற கப்பல்களையும் இவர் வைத்திருந்தார். வ.இ வின் கப்பல் 1960ம் ஆண்டளவில் வல்வை ஆதிகோயில் கடற்கரையில் வைத்து உடைக்கப்பட்டது. வல்வையில் கடைசியாக கட்டப்பட்ட கப்பல் பர்வதாபத்தினி ஆகும். கப்பல் கட்டுவதில் கைதேர்ந்தவர்கள் பலர். அந்தவகையில் வேலுப்பிள்ளை மேத்திரியார், வடிவேலு மேத்திரியார், சின்னத்தம்பி மேத்திரியார் போன்றவர்கள் முக்கியமானவர்கள். புகழ்பெற்ற தண்டயல்களாக விளங்கியவர்களில் ராமசாமித் தண்டயல், முருகுப்பிள்ளைத் தண்டயல், செல்வமாணிக்கத் தண்டயல், சின்னையா தண்டயல், வடிவேல் தண்டயல், மாணிக்கவாசகம் தண்டயல், பொ.யோகமுத்துத் தண்டயல், ஆ.சுப்பிரமணியம் தண்டயல், செ.தில்லையம்பலம் தண்டயல், சிவகுருமூர்த்தி தண்டயல், முத்துக் குமாரத் தண்டயல், சிவகுருத் தண்டயல் ஆகியோர் முக்கியமானவர்களாவார்கள்.

வ.இ.இராமசாமிப்பிள்ளையும் நடராசா வாத்தியாரும் இணைந்து கட்டி எழுப்பிய திருநிலைநாயகி என்ற கப்பலில் பல காலம் பணியாற்றியவர் சிவசுப்பிரமணியம் தண்டயல் ஆவார். பிரபல வர்த்தகர் செ.தங்கவடிவேல் இங்கிலாந்து சென்று பெரிய ரோலர் மீன் பிடிக்கப்பலை வாங்கி அதை குணசுந்தரம் அவர்களே செலுத்தி வல்வைக்கு கொண்டு வந்து தொழில் செய்தார்கள்.

இரண்டாம் உலகப்போர் முடிவடைந்தபின்பு தொடர்ந்து வந்த அரசினர் வல்வெட்டித்துறையிலிருந்த கப்பல் கட்டும் தொழிலை ஊக்குவிக்காமல் ஏற்றுமதி இறக்குமதி வர்த்த கர்களான தமிழர்களை வீழ்த்திய அரசு கூட்டுத்தாபனங்களை ஆதரித்ததோடு அரசுக்காதரவான சிலரையும் வியாபாரத்தில் ஈடுபடுத்தியது மட்டுமன்றி பிறநாட்டுக் கப்பல்களில் ஈழத்துப்பொருட்களை ஏத்தி இறக்கியது. மாலைதீவு, தூத்துக்குடி, ஏமன் போன்ற இடங்களில் பாய்மரக் கப்பல்கள் இன்னும் ஏற்றுமதி இறக்குமதி செய்வதைக் காணலாம். திரைகடல் ஓடித்திரவியம் தேடிய வல்வைமக்கள் வாழவழியின்றித் தவித்தனர். ஓடிக்கொண்டிருந்த கப்பல்கள் அழிந்துபோக இலங்கை சுதந்திரமடைந்த பின்பு ஏற்றுமதி இறக்குமதியை அரசு ஏற்றுக் கொண்டதாலும் சட்டவிரோத வியாபரங்களில் ஈடுபட நிர்ப்பந்திக்கப்பட்ட நிலைக்கு ஆளானார்கள். இதன் பின்புதான் பல ஆண் டுகளாகச் செய்த தொழில் கள்ளக்கடத்தலாக பெயர் மாற்றம் பெற்றது. தற்போது காலத்திற்கு ஏற்பவும் தற்கால அரசியல் முறைக்கு ஏற்பவும் படித்து உயர் அரசாங்கப் பதவி களிலும் வெளிநாட்டுக் கப்பல்களிலும் தொழில்புரிகின்றனர். தற்போது கப்பலில் வேலைசெய்த நடுத்தரவய தானவர்கள் 1990ம் ஆண்டுகளின்பின் நாட்டின் நிலமை காரண மாக கனடா, லண்டன், அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று பின்பு குடும்பத்தினரை அழைத்து அங்கேய நிரந்தர வாசியாகிவிட்டார்கள்.

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
மேலும் வாசிக்க
Scroll to Top
Scroll to Top