வல்வையம்பதி க.குமாரசாமி முதலியார் (1791 – 1874)

வல்வை. ந.நகுலசிகாமணி.

தீருவில் முருகன் ஆலய பழைய தோற்றம்

யாழ்ப்பாண வடமராட்சியைச் சேர்ந்த கட்டைவேலி, பருத்தித்துறை, உடுப்பிட்டி என்னும் முப்பெரும் பிரிவுகளுள் வல்வெட்டி என்னும் பேரூரில் கதிர்காமபூபதி முதலியார் என்பவர் ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் பெருமதிப்பிற்குரியவராய் வாழ்ந்து வந்தார்.

வல்வெட்டியில் பெயரும் புகழும் பெற்று அரசறியப் பெருவாழ்வு வாழ்ந்த மற்றொரு பெரியார் சந்திரசேகர முதலியார். இவர் பெரும் புலமையும் பெரு வீரமும் பெற்று வாழ்ந் தவர். சண்டியன் சந்திரசேகர் என்று மக்களிடையே மதிப்பைப் பெற்றவராயிருந்தார். ஒல்லாந்த அரசினர் அவருக்கு பட்டமும், பதக்கமும், பதவியும் அளித்து கப்ரின் சந்திரசேகர முதலியார் எனப் பெருமைப் படுத்தினார்கள்.

சந்திரசேகருக்கு முத்துக்குமாரு, குமாரசாமி என இரு புதல்வர்களும் வள்ளியம்மை என்றொரு பெண்ணும் பிறந்தனர். அவர் தன் அருமைமகளை முன்கூறிய கதிர்காம பூபதிக்கு திருமணம் செய்து கொடுத்தார். சந்திரசேகர் 96 வயதுவரை வாழ்ந்தார்.

புலமையோடு பிறந்த குமாரசாமி முதலியார்

மரபு வழிவந்த புலவர்களான முத்துக்குமாரு, குமாரசாமி ஆகியோரின் சகோதரியான வள்ளியம்மையை மணந்த கதிர்காமபூபதி இல்லறத்திற்கேற்ற பல நல்லறங்கள் செய்து இனித்திருந்த காலத்தில் 11 -8 -1791 அன்று ஓர் ஆண்குழந்தை பெற்றார். குமாரசுவாமி எனப் பெயரிட்டு வளர்த்தகாலத்தில் மழலைப் பருவத்திலே பிஞ்சுக் கவிதைகள் பாடத் தொடங்கினார். பெற்றோர்களுடன் கோயில்களுக்குச் சென்றபோதெல்லாம் தானே புனைந்தபாடல்களைப் பாடி வணங்கிவந்தார். அவர் அக்காலத்தில் பாடியனவாகக் கணிக் கப்பெற்ற பாடல்களுள் கந்தவனநாதர் ஊஞ்சல், மூளாய் சித்திவிநாயகர் ஊஞசல், தீருவில் சுப்பிரமணியர் பதிகம், நல்லைக் கலித்துறை முதலியன ஒரு சில பாடல்களாகும். தீருவில் சுப்பிரமணியர்மீது பாடிய பதிகத்தில் எமக்குக் கிடைத்த ஒரு பாடலைப் பார்க்க…..

பூமேவு வாவிப் பொறிச்சிறகர் வண்டினம்

பொதியினர் முறுக்கவிழ்த்துப்

புது மது வருந்தியிசை கூடக் கருங்குயில்கள்

புத்தமிழ் துறந்து பாட

மாமேவு களிமயில் சிறப்பறை யடிக்கமட

வஞ்சநட மாடநீடீ

மன்னுதண்டலை தலையசைத்து நனி நாடமிடை

வண்டான நன்று புகழுந்

தேமேவு வளமருத வயல்புடை யுடுத்திலகு

செங்கமலை தங்கு வல்வைத்

தீருவிலை நற்றான மாவெண்ணி வள்ளியொடு

தேவகுஞ்சரியு மகிழத்

தூமேவு சக்தி கைத்தல மொளிர வெம்மனோர்

துயர் தீர்க்க வந்த முருகேசு

சூரநீ லக்கபல மயில்மீ துலாவி வரு

சுப்பிரமணியக் கடவுளே.

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
மேலும் வாசிக்க
Scroll to Top
Scroll to Top