நுழை வாயில்


அன்புடையீர்....!

இலங்கையின் வடபாகத்தின் கடற்கரையோரத்தில் எமது வல்வை கிழக்கே ஊறணியில் இருந்து மேற்கே ஊரிக்காடு வரையும் தெற்கே வல்வெட்டி, கம்பர்மலை கிராமங்களும் அடங்கப்பட்ட 250 ஏக்கர் விஸ்தீரணமுள்ள சிறிய பட்டினமாகும். இது ஆதி வல்வெட்டித்துறை. இன்று பழமைவாய்ந்த கந்தவனக்கடவை தொடக்கம் தொண்டமனாறு செல்வச்சந்நிதி ஈறாகவும் மூன்றரை மைல் நீளமும் அரை மைல் அகலமும் உள்ள வல்வெட்டித்துறை நகரசபையாக மிளிர்கின்றது. ஒவ்வொரு கிராமமும் தமக்கென்று பாரம்பரிய கலாச்சாரம, அரசியல், பண்பாடுகளை கொண்ட கதைகளை தாங்கியுள்ளது. எமது வல்வைக்கு நீண்ட வரலாற்றுப் பாரம்பரியம் உண்டு.
கனடா இங்கிலாந்து ஜரோப்பியா போன்ற நாடுகளின் வரலாற்றுப் பாரம்பரிய உருவாக்கத்தில் உள்ள வரலாற்றிற்க்கு  மிகமுக்கிய இடம் உண்டு. இங்கு சின்னச் சின்ன இனங்கள் எல்லாம் ஆயிரம் வருட வரலாற்றை ஆதாரத்துடன் விளக்கக்கூடிய தகுதியுடன் இருக்கின்றார்கள். இளம் வயதில் தந்தை செல்வாவின் "சுதந்திரன்" பத்திரிகையில் எனது கிராமம் பற்றி கட்டுரை எழுதியதில் ஆரம்பித்து வல்வை சனசமூகநிலைய நிர்வாகசபை, தமிழரசுக்கட்சி இளைஞர் அணி ஆகியவற்றிலிருந்து எனது பொதுப்பணி ஆரம்பித்தது எனலாம். 1969ம் ஆண்டு இலங்கை தமிழரசுக் கட்சியின் உடுவில் மாநாடு நடந்தபோது குரும்பசிட்டி இரா.கனகரெத்தினம் தம்பதியினர் தமிழின வரலாற்றை ஈழத்தமிழரின் போராட்ட நிகழ்வுகளை ஆவணமாக சேகரித்து வைத்ததைப் பார்க்கும் சந்தர்ப்பம்கிடைத்தது. அவை என்மனதை வெகுவாக கவர்ந்தன. அப்போது எம் ஊர் வரலாற்றை, செய்திகளை அதேபோல் சேகரிக்கவேண்டும் என்ற எண்ணம் என் உள்ளத்தில் பிறந்ததுதான் இந்த வரலாற்று ஆவணக்காப்பகம். இன்று இந்த ஆவணக்காப்பகம் ஈழத்தின் வரலாறுகளையும் சேர்ப்பதோடல்லாமல் யாழ் நூல் நிலையத்தில் எரிந்த, செல்லரித்த நூல்களையும் மீள்பதிப்புச் செய்யும் பணியிலும் ஈடுபடுகின்றுது.

இது எமது பிறந்த மண்ணின் காவியம் நமது முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்ற சொத்து. பூமிப்பந்தின் பலபாகங்களிலும் வாழும் எமது உடன்பிறப்புகளையும் வரலாற்று ஆய்வாளர்களையும் வல்வைத்தாயிடம் சங்க காலத்திலிருந்து இன்றுவரை உங்களை அழைத்துச் செல்கின்றோம். இத்தளத்தை ஆரம்பித்ததோடு அல்லாமல் எவ்வளவோ நிலைநிறுத்த இருந்தவேளை எம்மைவிட்டு வரலாற்றுக்கே வரலாறாகிவிட்ட எமது இரு கண்களாகவும் வாரிசுகளாகவும் வந்த எமது அன்புச் செல்வர்கள் சந்துரு, சௌமிக்கு சமர்ப்பணமாக உங்கள் அனைவருக்கும் இவ் இணையத்தளத்தை சமர்ப்பிக்கின்றோம்.

நன்றி

அன்புடன்

ந.நகுலசிகாமணி

உமா நகுலசிகாமணி

Click to enter